images.jpgதீபாவளி வெளியீடாக வந்திருக்கும் சர்க்கார், எந்தளவிற்கு ஒரு திரைப்படமாக வெற்றியடைந்திருக்கிறது அல்லது தோல்வியடைந்திருக்கிறது என்பதை இதை எழுதும் நானோ, சினிமா ஞானிகளோஅல்லது உலக சினிமா ரசிகர்கள் என்று கூறிக்கொள்பவர்களோ முடிவெடுத்து விட முடியாது. ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் முடிவாகவே இது இருக்கபோகிறது. . இது தமிழ் மக்களின், ரசனை பரிசோதனைக்களம் .
சர்க்கார் ஒரு பொழுதுபோக்கு மசாலா படம் . கடந்த இரண்டு மாதங்களில் வந்த முக்கியமான பத்து படங்களில் மூன்று மசாலா படங்கள் . அவை சண்டகோழி , சாமி 2 மற்றும் சீமாராஜா . இந்த மூன்றுமே தோல்வியடைந்த நிலையில் மசாலா அல்லாமல் வந்த பரியேறும் பெருமாள் , 96 , மேற்கு தொடர்ச்சி மலை , செக்க சிவந்த வானம் , ராட்சசன் என சில படங்கள் ஒவ்வொரு தொகுதி மக்களை கவர்ந்தன. வர்த்தக வெற்றி பெற்றன .
இதற்க்கு முன் சன் பிக்சர்ஸ் விஜயின் இரண்டு படங்களை விநியோகம் செய்து இருந்தது . அவை வேட்டைக்காரன் , சுறா . அவற்றுடன் இந்த படத்தை ஒப்பீடு செய்யமுடியாது . ஏனெனில் இந்த படத்தில் ஓரிரு நல்ல காட்சிகள் இருக்கின்றன . அங்காங்கே கைதட்ட கூடிய வசனங்கள் இருக்கின்றன . உப்பு காத்து காட்சி சிறப்பு. சமகால தமிழ்நாட்டின் பிரச்சனைகளுடன் படம் பயணிப்பது இன்னொரு சிறப்பு .இவையெல்லாம் மட்டும் நம் தமிழ் ரசிகர்களிடம் படம் வெற்றியடைய போதுமானதா?
படத்தில் ஒரு கதநாயகி வைத்தே ஆக வேண்டும் என்பதற்காக ஒரு பெண். கீர்த்தி சுரேஷ்... . பாடலுக்கு மட்டும் ஒரு கதாநாயகி போடுவது மக்களை இன்னும் ரசிக்கத்தூண்டுகிறதா என்ற கேள்வி எழுகிறது எனக்குள் . ஒரு பெரும் கம்பனியின் CEO . ஓரளவு வயதாகி விட்டது . அவருக்கு திருமணமாகி மனைவி குழ்ந்தை இருக்கிற மாதிரி கதையை எழுதி இருக்கலாம் . அதை விடுத்து என்றும் போல இதிலும் , காதலித்து டூயட் பாடி தேவையில்லாமல் ஒரு பாட்டு வேற வந்து படத்தை இழுக்கிறது .
சரி... இன்னும் இது நம் ரசிகர்களுக்கு அலுப்படிக்கவில்லை போலும் , இந்த ஹீரோ அறிமுகப்பாடலுமா இன்னும் அலுப்படிக்கவில்லை . இதுக்கு இல்லையா சார் ஒரு end-u? சிம்டான்காரன் என்ற பாடல் படத்தில் எதற்கு வைத்தீர்கள் என்று நான் முருகதாசை என்றாவது ஒரு நாள் கேட்க வேண்டும் . ஆக மொத்தம் இரண்டு பின்னணியில் ஒலித்த பாடல்கள் மட்டும் வந்திருக்க வேண்டியது .
டாப் டக்கர் என்ற பாடல் சண்டைக்காட்சிகளுக்கு பின்னணியாக பயன்படுகிறது .. சண்டைக்காட்சிகள்.. ஐயகோ .. படு அபத்தம் . ஒரு ராட்சச கம்பனியின் CEO எப்படி இந்த அரசியல் சாக்கடையை எதிர்கிறார் என்பதே கதை ... எப்படி எதிர்க்கிறார் என்றால் அடித்து துவைத்து துவம்சம் செய்து எதிர்கிறார். கார்பரேட் கம்பனிகள் இன்று நாம் இங்கு எதை பார்க்க வேண்டும் எதை வாங்க வேண்டும் என்று எங்கோ இருந்து முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக இருக்க , எதற்காக அடித்து துவம்சம் செய்யும் தனி மனித போராட்டம். இன்னும் மக்கள் இதை ரசிக்கிறார்களா? ரசிக்கலாம் . ரசனை ஒவ்வொருவரின் உரிமை . ஆனால் ரசனை நம் அறிவின் அளவுகோலும் கூட . தெலுங்கு பட சண்டைகளை கலாய்ப்பவர்களை இன்று நம்மில் அதிகம் காணலாம் . நம் வீட்டு பிரச்சனையை மறந்து விட்டு கதிரை வைத்து மதிலின் மேலாக எட்டி பக்கத்து வீட்டு சண்டையை பார்ப்பவர்கள் இவர்கள் .
ஆக மொத்தம் சர்க்கார் ஒரு அளவுகோள் . அளவுகள் இந்த படத்தின் வெற்றி தோல்வியின் மூலம் தெரியவரும் .